சுதந்திரதின பவளவிழாவில் இலங்கை-இந்திய தேசங்கள் | தினகரன் வாரமஞ்சரி

சுதந்திரதின பவளவிழாவில் இலங்கை-இந்திய தேசங்கள்

இலங்கை தனது 75 ஆவது சுதந்திரதினத்தை எதிர்வரும் ​பெப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாடவிருக்கின்றது. இந்தியா தனது 75 ஆவது சுதந்திரதினத்தை கடந்த வருடத்தில் கொண்டாடியது. இவ்விரு நாடுகளும் குறுகிய காலப்பகுதியில் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டதால் இரு நாடுகளுமே தமது சுதந்திரத்தில் 75 வருடத்தைக் கொண்டாடுவதாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆங்கிலேய ஆட்சியாளர்களின் பிடியில் இவ்விரு நாடுகளுமே இருந்தன. இந்திய-ா 1947 ஆம் ஆண்டிலும், இலங்கை 1948 ஆம் ஆண்டிலும் சுதந்திர நாடுகளாக விடுதலை பெற்றுக் கொண்டன. இந்தியாவும் இலங்கையும் விடுதலை பெற்றதிலிருந்தே வலிமையான இருதரப்பு நட்புறவைப் பேணி வந்திருக்கின்றன.

இலங்கையின் உண்மையான தோழனாக இந்தியா செயற்பட்டு வந்துள்ளது. இலங்கைக்கு நெருக்கடி ஏற்படுகின்ற வேளைகளிலெல்லாம் விரைந்தோடி வந்து உதவிக்கரம் நீட்டிய நாடு இந்தியா ஆகும். இந்தியாவின் மத்தியில் ஆட்சியதிகாரம் மாறுகின்ற போதிலும், இருநாடுகளுக்குமிடையிலான நல்லுறவு ஒருபோதுமே குறைவடைந்ததில்லை. இலங்கையுடன் இந்தியா எப்போதும் நல்லுறவைப் பேணியே வந்துள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே அவ்வப்போது சிறுசிறு முரண்பாடுகள் உருவெடுத்துள்ள போதிலும், நட்புறவில் எதுவித பாதிப்புமே ஏற்பட்டதில்லை.

லங்கையின் நெருக்கடி நேரங்களில் உலகில் வேறு எந்தவொரு நாடுமே இந்தியா வழங்கியது போன்ற உதவியை வழங்கியது கிடையாது. கொவிட் தொற்று இலங்கையில் தீவிரமடைந்திருந்த வேளையில், இந்தியா பலவழிகளிலும் உதவிகளை வழங்கியிருந்தது. இலங்கைக்கு முதன் முதலில் தடுப்பூசியை வழங்கியதன் மூலம் கொவிட் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு உதவிய நாடும் இந்தியா ஆகும்.

அதன் பின்னர் இலங்கையில் உருவெடுத்த பொருளாதார நெருக்கடியின் போதும் இந்தியா பலவழிகளிலும் வழங்கிய உதவிகள் ஏராளம். எரிபொருள், விவசாயத்துக்கான பசளை, இலகு வட்டியிலான கடனுதவிகள் என்றெல்லாம் பல்வேறான உதவிகளை இந்தியா வழங்கியது மாத்திரமன்றி, தற்போதும் உதவிகளை தொடர்ந்தும் வழங்கி வருகின்றது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நல்லுறவுகளில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படுவதற்கு சில விடயங்கள் காரணங்களாக அமைந்து விடுகின்றன. இக்காரணிகளில் சீனாவின் பிரசன்னம் பிரதானமானதாகும்.

சீனா எப்போதுமே தனது பிராந்திய நலன் மீதான அக்கறையுடனேயே செயற்பட்டு வருகின்ற நாடாகும். அயல்நாடான இந்தியாவுடனான நீண்டநாள் விரோதம் காரணமாக இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் சீனா தனது பலத்தை அதிகரித்துக் கொள்ள விரும்புகின்றது. அந்த நோக்கத்துக்காக இலங்கையில் தனது செல்வாக்ைக அதிகரித்துக் கொள்வதில் சீனா எப்போதுமே குறியாக இருந்து வருகின்றது.

கடந்த காலத்தில் இலங்கையில் சீனா ஆரம்பித்துள்ள முதலீட்டுத் திட்டங்களின் உள்நோக்கமானது இந்தியாவைக் குறியாக வைத்தவைதான் என்பதை புரிந்து கொள்வது கடினமான விடயமல்ல. தென்னிலங்கையில் தனது செல்வாக்ைக அதிகரித்துக் கொண்டுள்ள சீனா, தற்போது வடபகுதியிலும் தனது செல்வாக்ைகப் பெருக்கிக் கொள்வதற்கு முற்படுவது நன்றாகவே தெரிகின்றது.

அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த சீன தூதரக உயரதிகாரிகள், அங்குள்ள மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்நடவடிக்ைகயானது வடபகுதி மக்களைக் கவருவதற்கானதென பலதரப்பினராலும் விமர்சிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீனாவின் இத்தகைய நடவடிக்ைககளைப் பொறுத்தவரையில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான நல்லுறவுகளில் கசப்பை ஏற்படுத்தும் செயற்பாடு இதுவென்பதை ஒப்புக்ெகாள்ளாமலிருக்க முடியாது.

ஆனாலும் இந்தியா ஒருபோதுமே இலங்கையுடன் வெறுப்பை வெளிப்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டதில்லை. வேற்றுமை களைந்து ஒற்றுமையைப் பலப்படுத்தும் விதத்திலேயே இலங்கை விவகாரத்தில் இந்தியா எப்போதும் செயற்பட்டு வருகின்றது.

இலங்கையில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்துச் செல்கின்ற வேளையிலும் கூட, இந்தியா ஒருபோதுமே பகைமை பாராட்டியதில்லை. இந்திய உதவிகள் தொடர்ந்த கொண்டேயிருக்கின்றன. இலங்கை தனது உண்மையான சகோதர உறவுடைய நாடென்றே இந்தியா கருதி வருகின்றது.

அயல்நாடுகளான இவ்விரு நாடுகளும் 75 ஆவது சுதந்திர தினத்தில் காலடி வைத்திருக்கின்ற இவ்வேளையில் தங்களுக்கிடையிலான உறவை மென்மேலும் பலப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டுமென்பதே இருநாட்டு பாரம்பரிய கலாசார உறவுகள் மீது அக்கறை கொண்டுள்ளவர்களின் விருப்பமாக உள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான நல்லுறவுகளுக்கு சவாலான மற்றொரு விடயமாக இந்திய மீனவர்களின் அத்துமீறிய ஊடுருவல் விளங்குகின்றது. இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசித்து மீன்பிடிப்பது இன்னுமே முடிவின்றித் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இலங்கைக் கடல் எல்லைக்குள் பிரவேசிக்கின்ற இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்ற சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலில் தாங்கள் பாதிக்கப்படுவதாக இந்திய மீனவர்கள் கூறுகின்றனர். மீனவர் விவகாரத்தை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அரசியல் நடத்தி வருகின்றனர்.

ஒரு நாட்டின் மீனவர்கள் மற்றொரு நாட்டின் கடல் எல்லைக்குள் பிரவேசிப்பது குற்றமென்பது தெரிந்திருந்தும் கூட, தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறல்களை நியாயப்படுத்துகின்ற வகையில் தமிழக அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டு வருவது வருந்தத்தக்கதாகும்.

இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறுகின்ற இந்திய மீனவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசியல்வாதிகள் செயற்பட்டு வருவதனாலேயே தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் தொடர்ந்தும் அத்துமீறி வருகின்றனர்.

இரு நாட்டு நல்லுறவுகள் தொடர்வதற்கு சவாலாக உள்ள விடயங்களில் இதுவும் ஒன்றாகும். 75 ஆம் வருட சுதந்திர நிறைவில் இரு நாடுகளும் உள்ள இந்நிலையில், இந்திய மீனவர்களின் அத்துமீறிய ஊடுருவல் பிரச்சினையும் இணக்கப்பாட்டுடன் தீர்த்து வைக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது.

இந்தியா, இலங்கை ஆகிய இருநாடுகளுமே ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தில் கட்டுண்டு கிடந்தவையாகும். ஐரோப்பியர்கள் காலடி வைப்பதற்கு முன்னரே இருநாடுகளும் கலாசார நட்புறவு ரீதியாக ஒன்றுபட்டு இருந்த நாடுகளாகும். சுதந்திரத்தின் பவளவிழாவில் காலடி வைத்துள்ள இவ்விரு நாடுகளின் நட்புறவு மென்மேலும் தொடர வேண்டுமென்பதே இருதரப்பு உறவை நேசிக்கின்ற மக்களின் அவாவாகும்.

எஸ்.சாரங்கன்

Comments