GSP சலுகைகளை தொடர்ந்தும் தக்க வைக்குமா இலங்கை | தினகரன் வாரமஞ்சரி

GSP சலுகைகளை தொடர்ந்தும் தக்க வைக்குமா இலங்கை

கடந்த மூன்றாண்டு காலப்பகுதியில் உலக நாடுகளின் பொருளாதாரம் மூன்று விதமான அதிர்ச்சிகளை சந்திக்க நேர்ந்தது. முதலாவது உலகளாவிய கொவிட் 19 தொற்று நோய். இரண்டாவது ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்துள்ள கொடிய யுத்தம். மூன்றாவது உலகளாவிய நிரம்பல் சங்கிலியில் ஏற்பட்ட முறிவுகளும் அதனால் பொருள் விலைகள் சடுதியாக அதிகரித்துச் சென்றமையுமாகும்.
 
குறிப்பாக, ஐரோப்பிய வட்டகையைச் சேர்ந்த பல நாடுகள் இம்மூன்று அதிர்ச்சிகளாலும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக அண்மைக்காலத்தில் இங்கிலாந்தின் பணவீக்கம் சடுதியாக அதிகரித்துச் சென்றமையும் அதன் பாதிப்புகள் அரசியலில் உறுதிப்பாடற்ற நிலையினை உருவாக்கியுள்ளமையையும் காணமுடிகிறது.
 
ரஷ்யாவின் யுத்தம் காரணமாக உலகளாவிய பொருள் நிரம்பல் சங்கிலியில் முறிவுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன. அதனால் புதுப்பிக்கத்தக்க சக்திவளங்களை நோக்கி ஐரோப்பிய நாடுகள் மாறவேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
 
நிரம்பல் பக்கத்தில் இருந்து வரும் அழுத்தங்கள் காரணமாக உற்பத்தி குறைவடைந்து விலைமட்டங்கள் அதிகரிக்கும் அபாய நிலை உருவாகி வருகிறது. இதனால் பணவீக்கத்துடன் வேலையின்மையும் அதிகரிக்கும் தேக்கவீக்கநிலை ஐரோப்பிய நாடுகளில் படிப்படியாக வருகிறது.
 
பணவிக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கங்கள் இறுக்கமான பணக்கொள்கையைக் கடைப்பிடித்து வட்டி வீதங்களை உயர்த்தி வருகின்றன. இது வியாபார நிறுவனங்களை மிகமோசமாகப் பாதிப்பதுடன் மறுபுறம் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் வியாபார நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு வழங்க விரிவாக்க இறைக்கொள்கையைப் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
 
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இறுக்கமான பணக்கொள்கையை கடைப்பிடிப்பதுடன் வளர்ச்சியையும் பொருளாதாரத்தின் இயங்குநிலையையும் தொடர்ச்சியாகப் பேணிச் செல்ல நெகிழ்தன்மையுள்ள இறைக்கொள்கையை அவை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. அதாவது, இது ஒரு வாகனத்தில் பிரேக் பிடித்துக்கொண்டு அக்ஸலரேட்டரை அழுத்துவதை ஒத்த நடவடிக்கையாகும். இவற்றுக்கிடையில் ஒரு சமநிலையினைப் பேணவேண்டிய கட்டாயத்தில் ஐரோப்பிய நாடுகள் உள்ளன.
 
இலங்கையிலும் இதனை ஒத்த ஒரு நிலைமை தோன்றியுள்ளமையை நாம் தெளிவாக அவதானிக்கலாம். எரிபொருள் விலையேற்றம், கடன் சுமை அதிகரிப்பு, விவேகபூர்வமற்ற விவசாயக்கொள்கை மற்றும் கொவிட் 19 கொள்ளைநோய்த் தாக்கம் போன்ற உள்நாட்டு மற்றும் வெளியக அதிர்ச்சிகளால் இலங்கைப் பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டு இலங்கை ரூபாவின் வெளியகப்பெறுமதி மோசமாகத் தேய்வடைந்துள்ளதுடன், நாட்டின் பணவீக்கம் தாவிச்செல்லும் பணவீக்கமாக 73 சதவீதமாக அதிகரித்துள்ளது. இரட்டை இலக்கப் பணவீக்கம் பொருளாதாரத்திற்கு ஊறுவிளைவிக்கும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம் நாட்டின் அரச செலவினங்கள் நெருக்கடிகள் காரணமாகவும் ஊதிப்பெருத்துப் போயுள்ள அரசதுறையின் அளவின் காரணமாகவும் அதிகரித்துச் சென்றுள்ள நிலையில் அரசவருவாய் ஈட்டும் நிலை குறைந்திருக்கிறது.
 
இலங்கை அரசு ஒருபுறம் வட்டிவீதங்களை அதிகரித்து பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதாக நினைக்கும் அதேவேளை, பணத்தை அச்சிட்டு அதனது இறைத்தேவைகளைப் பூர்த்தி செய்ய முயல்கிறது. பணவீக்கம் காரணமாக வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பலர் அரச நிவாரணங்களை எதிர்பார்த்துள்ளனர். அதேவேளை பாதிக்கப்பட்டுள்ள வியாபார நிறுவனங்களை காப்பாற்றி இயங்க வைக்க வேண்டிய தேவையும் உள்ளது.
 
ஐரோப்பிய நாடுகள் இவ்வாறான நெருக்கடி நிலைகள் உருவாகும்போது தத்தமது நாடுகளின் பொருளாதாரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் வர்த்தகப் பாதுகாப்புவாதக் கொள்கைகளைப் பயன்படுத்தினால் அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மெதுவடையும். ஒரு கணிப்பீட்டின் படி அபிவிருத்தியடைந்த நாடுகளின் பொருளாதாரத்தில் ஏற்படும் ஒன்று அல்லது இரண்டு சதவீத பொருளாதாரப் பின்னடைவானது குறைவிருத்தி நாடுகளினதும் எழுச்சிபெற்றுவரும் நாடுகளினதும் பொருளாதாரங்களை 8 தொடக்கம் 10 சதவீதம் வரையில் பின்னடையச் செய்துவிடும் எனக்காட்டப்பட்டுள்ளது.
 
இந்நாடுகளின் ஏற்றுமதிச் சந்தைகள் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளிலேயே காணப்படுவதே இதற்குக் காரணமாகும். உலக நாடுகள் பொருளாதார பின்னடைவுகளையும் நெருக்கடிகளையும் சந்திக்கும்போது பாதுகாப்புவாதக் கொள்கைகளை அந்நாடுகள் கைக்கொள்ளுமாயின் எல்லா நாடுகளும் பாதிக்கப்படுவதுடன் அதன் தாக்கம் வளர்ச்சி குன்றிய நாடுகளிலேயே அதிகம் உணரப்படும்.
 
இந்நிலையிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கியுள்ள GSP தீர்வைச் சலுகைகளை தொடர்வதா இல்லையா என்ற முக்கிய தீர்மானத்திற்கு பின்னூட்டல் வழங்கும் ஒரு மதிப்பீட்டை விரைவில் செய்து அறிக்கையிட உள்ளதாக ஐரோப்பிய கமிஷன் அண்மையில் அறிவித்திருந்தது.
 
கடந்த ஆண்டு ஐரோப்பியப் பாராளுமன்றமானது இலங்கையில் தொடர்ச்சியாக மோசமடைந்து சென்ற மனித உரிமை குறித்த கரிசனையை வெளிப்படுத்தி GSP ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் தீர்வைச் சலுகைகளை இடைநிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்தைக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது.
 
இதன் அடிப்படையிலேயே இலங்கையின் மனித உரிமைகள் பற்றிய அண்மைக்காலச் செயற்பாடுகள் பற்றிய ஒரு ஆய்வறிக்கை 2023 ஆரம்பப் பகுதியில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
 
அதன் அடிப்படையிலேயே இலங்கைக்கு மேற்படி சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.
 
இலங்கை மக்கள் இப்போது அனுபவித்துவரும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து அதன்போது கருத்திற் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இலங்கையில் பொதுமக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு மனித உரிமைகள் வெளிப்படையாக மீறப்பட்டமைதான் முழுமையான காரணமெனவும் ஒரு சாரார் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
எவ்வாறாயினும் மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் கடப்பாடுகளை இனிமேலும் தட்டிக்கழிக்க முடியாத சூழ்நிலை படிப்படியாக உருவாகி வருகிறது. இலங்கைக்கு 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதிசார் நன்மைகளைப் பெற்றுத்தரும் GSP சலுகைகளை இலங்கை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளுமா அல்லது "நுணலும் தன்வாயாற்கெடும்" என்பது போல் செய்யக் கூடாததைச் செய்து 2010/-2017 காலப்பகுதியில் அச்சலுகைகளை இழந்தது போல இப்போதும் இழக்குமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அவ்வாறு நிகழுமாயின் அது ஒரு மோசமான அடியாக இருக்கும் என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை.
 
கலாநிதி 
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments