
ஜெனிவா மனித உரிமை மாநாடு நடைபெற்று வருகின்ற நிலையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் நிலைப்பாடுகள் பற்றி சில பிரதிநிதிகள் இவ்வாறு சொல்கிறார்கள்.....
புளொட் அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கடந்த கால தீர்மானம் அல்லது இனி வரப்போகும் தீர்மானம் என எந்த தீர்மானமாக இருந்தாலும், எதுவும் நடக்கப்போவதில்லை.
நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணையை ஏற்றுக் கொண்டது. ஆனாலும் ஐ.நா பரிந்துரைகளை நிறைவேற்றவில்லை. முழுமையாக எதிர்த்த அரசாங்கங்களும் அதை செய்யவில்லை. இருந்தாலும், சில வேளைகளில் கடுமையான ஒரு தீர்மானம் வரும் என எதிர்பார்க்காவிட்டாலும், தீர்மானம் கொண்டுவரப்படும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும் அல்லது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இது ஒரு பேசு பொருளாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். போர்க்குற்றங்களாக இருக்கலாம், இனப்பிரச்சினை தீர்வாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும், சர்வதேசத்தின் மத்தியிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் தொடர்ந்தும் பேசு பொருளாக அது இருக்க வேண்டும், சரியான ஒரு சந்தர்ப்பம் வருகின்ற போது, ஒரு நியாயமான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் தான் இதை பேசு பொருளாக வைத்திருக்கின்றோம்.
அடிப்படையாக பேரினவாத சிந்தனைகள் இருந்தாலும், நாங்கள் பேசாமல் இருக்க முடியாது. நாங்கள் தொடர்ந்தும் எங்கள் அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும்.
நாங்கள் பேசாமல் இருந்திருந்தால், இது என்றைக்கோ மறக்கடிக்கப்பட்ட பிரச்சினையாகப் போயிருக்கும். ஆகையால், தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் தங்களால் முடிந்த முயற்சிகளை எடுத்து வருக்கின்றன.
அரசாங்கத்தை மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஆதரிக்கின்ற கட்சிகள் அவ்வாறு பிரச்சினை இல்லையென்று சொல்வார்கள். அது அனைத்து நாடுகளிலும் நடக்கின்ற பிரச்சினை. ஆனால், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்பிரச்சினை தீர்வு விடயங்கள் தொடர்பாக பேசுவதனால் தான் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கட்சிகளை ஆதரிக்கின்றனர். இது எமது கடமை, அதற்காகத்தான் அவர்கள் எங்களுக்கு ஆணையைத் தருகின்றார்கள் .
முன்னாள் வடக்கு மாகாண சபை -உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம்
தமிழ் மக்களுக்கெதிரான நடவடிக்கைகள் சுதந்திரம் கிடைத்த காலம் தொட்டே ஆரம்பித்து விட்டன. 10லட்சம் மலையக மக்களின் குடியுரிமையை பறித்தால் என்ன, எமது நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த விடயங்களாக இருந்தாலென்ன, சர்வதேச நீதி எங்களுக்கு வேண்டும் என்ற குரல் பல்வேறு மனித உரிமைகள் அமைப்புக்களாலும், தாயகத்தில் இருந்த எமது புலம்பெயர் அமைப்புகளாலும் முன்வைக்கப்பட்டன.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக இற்றைக்கு 13ஆண்டுகள் கடந்தும், சர்வதேச பொறிமுறைக்கு கீழான விசாரணை இதுவரை ஆரம்பிக்காத சூழ்நிலையிலும் கூட அதை நோக்கிய பயணத்தில் நாங்கள் வெற்றிகரமாக நடை போடுகின்றோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இணைந்து அனுப்பிய அறிக்கையின் பின்னரும் வெற்றி பெறவில்லை. நாங்கள் பல்வேறு அழுத்தங்கள் மிரட்டல்களுக்கு மத்தியில் எமது சாட்சியங்களை வழங்கியது மாத்திரமல்ல பலரின் சாட்சியங்களை அனுப்புவதிலும் வெற்றியைக் கண்டோம்.
இந்த சூழ்நிலையில், வடகிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கையொப்பமிட்டு விசாரணை அறிக்கை அனுப்பியிருந்தோம். அதுவும் வெற்றியளித்தது. சர்வதேச விசாரணை வர இருந்த நேரத்தில் தான் இலங்கை இணை அனுசரணை செய்வதாக, அதாவது வெளிநாட்டு நீதிபதிகளுடன் உள்நாட்டு விசாரணை என்று ஏற்றுக்கொண்டார்கள்.
அதன் பின்னர், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த பொழுது முழுமையாக அதிலிருந்து வெளியேறுவதாக சொன்ன இலங்கை அரசு, தற்பொழுது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருக்கின்ற நிலையில் உள்நாட்டு பொறிமுறை என்று பேசத் தொடங்கிவிட்டது.
பாதுகாப்புச் சபையின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற இறுக்கமான நிலைப்பாட்டை அறிவிக்கும் வாய்ப்பு இந்த 51வது கூட்டத்தொடரில் இருந்தாலும் கூட, அடுத்த மார்ச் மாதம் தான், 52வது கூட்டத்தொடரில் தான் ஐ.நா மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் இறுதியான அறிக்கையை வெளியிடுவார்.
தமிழ் கட்சிகள் தமிழ் மக்களை ஏமாற்றவில்லை. பிரதான கட்சிகள் மூன்று இணைந்து, சாட்சியங்களை சேகரிக்கின்ற பொதுச் சபை ஒன்று நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன. அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மியான்மார் நாட்டில் நடைபெற்றதைப் போன்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் செய்யப்படாவிட்டாலும் கூட, சாட்சியங்களை 20வருடங்களுக்கு சேகரித்து வைத்து, விசாரணைக்கு வழங்கக்கூடிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் -பேச்சாளர் க. சுஹாஸ்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சிபார்சுகளை மற்றும் ஆலோசனைகளை வழங்குகின்ற அதிகாரம் இருக்கின்றதே தவிர, விசாரணைகளை நடத்தி தண்டனைகள் வழங்குகின்ற அதிகாரம் கிடையாது. இதனைத் தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். மனித உரிமை பேரவைக்குள் பொறுப்புக்கூறலை முடக்கி, இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசத்தைக் கொடுத்து, இலங்கை அரசையும் படைகளையும் தொடர்ச்சியாக பாதுகாத்து, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கிடைக்கக்கூடிய நீதியை இன்னமும் தள்ளிப் போடாமல் உடனடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கை.
இலங்கை அரசை காப்பாற்றியவர்கள், இலங்கை அரசுடன் இணைந்து நிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் கட்சிகளுமே, ஆரம்பத்தில் இருந்து தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு தீர்வு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, நீதி வழங்க வேண்டும் என கூறியபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் பங்காளி கட்சிகளும் சொன்ன விடயங்கள் யாதெனில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப முடியாது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி அவ்வாறு சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது என்றார்கள். அவர்கள் அவ்வாறு மக்களை ஏமாற்றினார்கள். இன்று உண்மைகள் எல்லாம் மக்களுக்கு தெரியத்தொடங்கிய பிற்பாடு, மக்கள் தங்களை முற்றிலும் நிராகரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்திய விடயத்தை பெயரளவில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், கடந்த காலத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை வரவேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் செயற்பட்டிருக்கின்றது. இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றியிருக்கின்றது. உள்நாட்டிலே, ஒற்றையாட்சிக்குள்ளும், 13வது திருத்தத்திற்குள்ளும் தீர்வை ஏற்படுத்த அவர்கள் ஏற்கனவே சம்மதத்தை அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் தெரிவித்துவிட்டார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு இனத்தை அழிப்பதற்கான வேலைகளை செய்துவிட்டு, நாடகமாடுகிறார்கள். இந்த நாடகத்தை தமிழ் மக்கள் இனியும் நம்ப தயாராக இல்லை .
சீ.வி.கே.சிவஞானம் - வடமாகாண சபை அவைத் தலைவர்
வாய்மூல அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் போர்க்குற்றங்கள், பொருளாதார குற்றங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. போர்க்குற்ற விசாரணையை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லக்கூடாது என்று சொல்லவில்லை. உடனடியாக கொண்டு செல்லலாம் என்று மக்களை ஏமாற்றவும் இல்லை. 41/1தீர்மானத்தில் இருந்து விலகுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்துவிட்டார். அரசாங்கம் சொல்லிக்கொண்டு தான் இருக்கும். நாங்களும் பேசிக்கொண்டு தான் இருப்போம். சர்வதேசமும் அதை விவாதித்துக்கொண்டு தான் இருக்கும். ஆகவே, இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக அல்ல இந்த விடயம். மாற்றங்கள் ஏற்படும். பல படிமுறைகளில் இந்த விடயங்கள் கையாளப்படும். பல நாடுகளில் உள்ள எமது புலம்பெயர் மக்கள் தமது நாட்டு அரசாங்கங்களும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 52வது தீர்மானத்தில் இவை நடக்கும் என்று சொல்ல நான் தயாராக இல்லை. 51வது தீர்மானத்தில் மாற்றங்கள் வரும் போது தான், அவை அமையலாம். முன்னேற்றங்கள் ஏற்படலாம். மாற்றங்கள் ஏற்படலாம். எமது கட்சிகளில் பிரச்சினைகள் உள்ளன.. அவை என்றுமே மாறப்போவதில்லை. வேறுபாடுகள் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் இலக்கை நோக்கிய பயணத்தில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றன.
சுமித்தி தங்கராசா