அஷ்ரஃபின் இழப்பு ஏற்படுத்திய அரசியல் இடைவெளி | தினகரன் வாரமஞ்சரி

அஷ்ரஃபின் இழப்பு ஏற்படுத்திய அரசியல் இடைவெளி

முஸ்லிம் அரசியலில் அஷ்ரஃபின் இடை வெளிக்குப் பின்னர் பல விடயங்கள் புரியப்படாமலுள்ளன. இருபத்திரண்டு வருட இடைவெளியில் சமூகத்துக்காக சாதிக்கப்பட்டவைகள் என்ன? இனியும் உரிமை அரசியலைப் பேசி முஸ்லிம்களை உசுப்பேற்ற முடியுமா? அஷ்ரஃபின் காலத்தில் எழுந்த அதே உரிமை பிரச்சினைகள் இப்போதும் இருக்கிறதா? அல்லது இந்தப் பிரச்சினைகள் வேறு வடிவமாகி தலையெடுக்கிறதா? இவ்வாறு தலையெடுக்கும் இந்தப் பிரச்சினைகளை தீர்க்கும் தைரியம் அல்லது அரசியல் பலம் இப்போதுள்ள முஸ்லிம் தலைமைகளிடம் உள்ளதா? என்று பல கேள்விகள் இந்த இடை வெளிக் காலங்களில் எழுந்துள்ளன.  

வெறுமனே அதுவும் ஏட்டிக்குப் போட்டியாக அஷ்ரஃபை நினைவுகூர்வதால் முஸ்லிம்கள் அடைந்த ஆதாயம்தான் என்ன? ஆகக்குறைந்தது அஷ்ரஃபின் மறைவின் பின்னர் ஏற்பட்ட பிளவுகளையாவது இந்த 22வருடங்களில் ஒற்றுமைப்படுத்த முடியாத பலவீனத்தில் முஸ்லிம் அரசியல் இருக்கிறது. பல தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டமைப்பாகச் செயற்படுவதையாவது இந்த முஸ்லிம் தலைமைகள் முன்னுதாரணமாகக்கொள்ளவில்லை. கூட்டமைப்பாகச் செயற்பட்டு எதைச் சாதிக்கின்றனர்? எனச் சிலர் கேட்கலாம். இனத்துக்கான குரல் பலப்பட்டிருக்கிறதே! மட்டுமல்ல புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தயவை நாடும் நிலைக்கு அரசாங்கம் சென்றுமுள்ளதே! இது, தமிழ் சமூகத்துக்கு கிடைத்துள்ள அடையாள அங்கீகாரமாகவே கருதப்பட வேண்டும்.  

இதுபோன்று, முஸ்லிம் சமூகத்துக்கும் ஒரு தனி அடையாளத்தைப் பெறவே அஷ்ரஃப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்தார். இதற்காக 12வருடங்கள் கடுமையாக உழைத்தார். வெவ்வேறு கட்சிகளிலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் உள்வாங்கினார். இந்த உள்வாங்கல் முயற்சிகளுக்காக என்னையைும் சிலரிடம் தூதாக அனுப்பினார். மர்ஹும்களான ரிஸ்வி சின்னலெவ்வை, எம்.ஐ.உதுமாலெவ்வை, நிந்தவூர் முஸ்தபா மற்றும் ஏ.ஆர்.எம்.மன்சூர் ஆகியோர் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இவ்வாறு சமூக ஆளுமைகளை ஒன்றிணைப்பது முஸ்லிம் அரசியலை பலப்படுத்தும், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் என்ற தெளிவு அஷ்ரஃபுக்கு இருந்தது.  

சமுதாயத்துக்கான குரல்கள் ஓரணியில் ஒலிக்க வேண்டுமென அஷ்ரஃபிடம் இருந்த அபிலாஷைகள் இன்றைய தலைமைகளிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏன்? ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளர் எம்.எச்.ஷேகு இஸ்ஸதீனையும் கட்சியில் இணைப்பதுதான் அஷ்ரஃபின் கடைசி ஆசையாக இருந்தது. 2000ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அஷ்ரஃப் இந்த ஆசையை வெளிப்படுத்தினார். அம்பாரை கச்சேரியில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ஷேகு இஸ்ஸதீனை ஆரத்தழுவிய அஷ்ரஃப், மீளிணைவுக்கான வாசலைத் திறந்திருந்தார்.  

இதுபற்றியெல்லாம், இன்றைய தலைமைகள் சிந்திப்பதுமில்லை. அடையாள அரசியலைப் பலப்படுத்துவதில் பலவீனமடைந்திருப்பதாக உணர்ந்தால், உரிமை அரசியலிலிருந்து முஸ்லிம் தலைமைகள் விடுபடுவதுதான் சிறந்தது. இல்லாத உரிமையைப் பேசப்போய் சகோதர தமிழ் சமூகத்துடன் முரண்படுவதை விட, அபிவிருத்தி அரசியலுக்குள் மாத்திரம் முஸ்லிம் தலைமைகள் சுருங்குவது சிறந்தது. அல்லது, உரிமை அரசியலுக்கான குரலைப் பலப்படுத்த சகல முஸ்லிம் தலைமைகளும் இணைந்து ஒரு கூட்டமைப்பாகச் செயற்படுவது சிறந்தது. அஷ்ரஃபின் 22வருட இடைவெளிகள் கற்றுத்தந்த பாடங்களே இவை.  

22வருடங்களாக அஷ்ரஃபின் இழப்பு நினைவு கூரப்படுகிறது. இந்நிலையில், அவரது ஆளுமைகளை உயிரூட்டவாவது முஸ்லிம் தலைமைகள் இணைந்திருக்கலாம். அல்லது, இந்த ஆளுமைக்கு நிகரான சாதனைகளை ஏதாவதொரு தலைமை சாதித்திருக்கலாம். இந்த இருபத்திரண்டு வருடங்களில் சாதிக்காத இந்த தலைமைகள் இனிச்சாதிக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே இணைதல்தான் இதற்கு விடிவு. இதைத்தான் முஸ்லிம் கட்சிகள் புரியாதிருக்கின்றன.  

தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை பூமியாக கிழக்கு மாகாணம் இருக்கையில், இந்த பூமியைப் பலப்படுத்தும் புரிந்துணர்வுகள் தமிழ் பேசும் தலைமைகளிடம் இல்லை. இதற்கான அடிப்படைக் காரணம் தெரியவுமில்லை. ஆனால், அஷ்ரஃபிடம் இந்த பூமிக்கென தனி மவுசு இருந்ததை மறக்க முடியாது.

இந்த மவுசைப் பலப்படுத்தவே அவரால் தேசிய ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது.  

இன்று, தமிழர்களின் தலைமைகள் இந்த பூமிக்கான உரிமைக் குரலை உயர்த்துமளவுக்கு முஸ்லிம் தலைமைகளின் குரல்கள் உயராமல் இருப்பது ஏன்? அடையாள அரசியலில் நாட்டமின்றி போனதாலா? அல்லது அஷ்ரஃபை நினைவுகூர்வதால் இதை அடைந்துவிடலாம் என்பதாலா? இல்லை, உசுப்பேற்றும் அரசியல் இன்னும் நிலைத்திருக்கிறது என நினைப்பதாலா?  

இன்றைய சூழ்நிலையில், அடிப்படை இருப்புக்கான அரசியலை விடவும் அன்றாடம் பிழைப்பதற்கான வாழ்வாதாரத்தை தேடும் வழிகளுக்காவது முஸ்லிம்களுக்கு இந்த தலைமைகள் வழிகாட்டுவது அவசியம். வாழ்வாதாரத்திலும் பார்க்க வாழ்வியல் பிரச்சினைகள் பெரிதாக இருந்தால், உரிமை அரசியலுக்கான வியூகங்களே வகுக்கப்பட வேண்டும். இதன் முதல் வியூகமாக முஸ்லிம் தலைமைகளின் இணைவுகள் இருக்க வேண்டும்..!  

சுஐப் எம்.காசிம்

Comments