ஐக்கிய தேசிய கட்சியின் 76ஆவது வருடாந்த மாநாடு; ஒரு பார்வை | தினகரன் வாரமஞ்சரி

ஐக்கிய தேசிய கட்சியின் 76ஆவது வருடாந்த மாநாடு; ஒரு பார்வை

இலங்கை சுதந்திரமடைந்து 76வருடங்களை அடுத்த வருடத்தில் கொண்டாடவிருக்கும் நிலையில் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் உதயமான முதலாவது அரசியல் கட்சியாக தேசபிதா டி.எஸ். சேனாநாயக்கவினால் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி அதன் 76ஆவது மாநாட்டை கடந்த வாரத்தில் நடத்தியுள்ளது. இந்த நிலையில் அக்கட்சியின் பயணப்பாதையை மீளாய்வு செய்து பார்ப்பது பொருத்தமுடையதாக இருக்கும் என நம்புகின்றேன்.

இன, மத, மொழி பேதங்களைக் கடந்து சிங்கள, தமிழ், முஸ்லிம் பறங்கியர் என அனைத்து மக்களையும் ஒரேகுடையின்  கீழ் இணைக்க ஆரம்பிக்கப்பட்டதே இந்த ஐக்கிய தேசியக் கட்சியாகும். ஜனநாயக விழுமியங்களை உள்வாங்கியதாகவே இந்தக்கட்சி பரிணமித்தது. தேசத்தின் சுதந்திரத்திற்காக பங்களிப்புச் செய்த பல தலைவர்கள், இன, மத, மொழி பேதமின்றி ஒன்றாகத்திரண்டு இக்கட்சியை தோற்றுவித்துள்ளனர்.

1946ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சி கொழும்பில் பாம்கோர்ட் இல்லத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நாடு சுயாதிபத்தியமுள்ள சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. சுதந்திர இலங்கையின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமராக தேச பிதா டி.எஸ். சேனாநாயக்க பதவியேற்றார். தனது அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவையில் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் என நான்கு சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சரவையை நியமித்தார். தனது கட்சியோ, அரசாங்கமோ இனவாதமில்லாத அனைத்து இனமக்களையும் உள்வாங்கியதான கட்சியாகவும் அரசாங்கமாகவும் இருப்பதை அவர் அன்று உத்தரவாதப்படுத்தினார்.

எமது நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக பௌத்த சிங்கள மக்களே காணப்பட்ட போது தமிழ், முஸ்லிம், பறங்கியர் சமூகங்களையும் இணைத்துக் கொண்டே ஐக்கிய தேசிய கட்சி ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பயணித்தது. அனைத்து மக்களையும் இலங்கையர்கள் என்ற பார்வையிலேயே அக்கட்சி பயணித்தது.  இன்றும் கூட அதே சித்தாந்தத்தில் தான் அக்கட்சியின் பயணம் தொடர்கிறது. நாட்டை பல தடவைகள் ஆட்சி செய்த கட்சியாகவே ஐக்கிய தேசிய கட்சி காணப்படுகிறது.

சில தேர்தல்களில் அக்கட்சி தோல்விகளைச் சந்தித்த போதிலும் அத்தோல்விகளால் துவண்டு போகாமல் அடுத்தடுத்த காலங்களில் மீண்டெழக்கூடிய பலத்தை அக்கட்சி பெற்றெடுத்ததை வரலாறு காட்டி நிற்கின்றது

2019ல் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியால் ஒரு ஆசனத்தைக் கூட வென்றெடுக்க முடியாது போனது.  அதற்கு மூல காரணம் எதிரணியினரால்  முன்னெடுக்கப்பட்ட இனவாத சிந்தனையே.

2019தேர்தலில் மிக மோசமான பின்னடைவுக்கு ஐ.தே.கவின்  உட்கட்சி பூசல்களும் ஒரு காரணமாக அமைந்ததெனலாம். இதற்கு தலைமைத்துவப் போராட்டம் முதற் காரணியாகும். தற்போதைய எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கட்சியிலிருந்து முக்கியமான பலரும் வெளியேறியமை முக்கியமானதாகும். இது மாற்றத்தரப்புக்கு வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தது.

வெற்றி தோல்வியென பல சவால்களை எதிர்கொண்டு ஐக்கிய தேசியக்கட்சி இன்று பவள விழாவைக் கடந்து அதன் பயணத்தை தொடரும் நிலையில் அது ஆரம்பிக்கப்பட்ட செப்டெம்பர் 6ஆம் திகதி அதன் 76வது  மாநாட்டை கொழும்பில் நடத்தியது. ஒரேயொரு ஆசனத்துடன் கூடிய கட்சியின் இந்த மாநாட்டில் யாருமே எதிர்பார்க்காதவகையில் வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என நாளா பிரதேசங்களிலுமிருந்து அதன் பேராளர்கள் திரண்டு வந்து சுகததாஸ உள்ளக அரங்கில் கூடியதன் மூலம் கட்சி மீண்டும் புத்துயிர் பெற்றிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. கட்சி பீனிக்ஸ் பறவையாய் மீண்டெழும் பலத்தை பெற்றுக் கொண்டிருக்கின்றது என்றே சொல்லவேண்டும்.

பத்தாயிரத்திற்கும் கூடுதலான பேராளர்கள் மண்டபத்தில்  நிரம்பியிருந்தனர். எந்தச் சவால் குறித்தும் அலட்டிக் கொள்ளாத தலைமைத்துவப் பண்புடன் கட்சித்தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க இங்கு இரும்பு மனிதராகவே காணப்பட்டார். தானொரு மக்கள் தலைவன் என்பதை அவரது மனத்திடம் வெளிக்காட்டியதை இங்கு அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

கனவான் அரசியல் செய்வதில் வல்லமை மிக்கவன் என்பதை ரணில் விக்ரமசிங்க சரியான முறையில் வெளிப்படையாகவே காட்டியுள்ளார்.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டையே ரணிலின் அரசியல் பயணப்பாதை காட்டி நிற்கின்றது. சலசலப்புகளைக் கண்டு அலட்டிக் கொள்ளாத அடியெடுத்து படியேறும் ஆளுமையே அவரது பயணப் பாதையாகும். ஆட்டம் காணமுடியாத ஆல விருட்சத்தின் ஆணிவேராக தன்னை பலப்படுத்திக்கொண்டு ஜனநாயகத்திற்குள்ளும் ஒரு சர்வாதிகாரம் இருக்கின்றது என்பதை அவர் ஆணித்தரமாக வெளிக்காட்டியுள்ளார்.

இன்று வெளியேறிய, வெளியே நின்று பார்க்கும் சக்திகள் மூக்கில் விரல்வைத்துப் பார்க்கும் வகையில் தன்பணியை தொடர்ந்து கொண்டிருக்கின்றார். தனியொருவனாய் நின்று ஆலமரம் விழாதவகையில் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

கட்சியாளர் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட சமயத்தில் ஐக்கிய தேசிய கட்சி துவண்டு போயிருந்தது. அவரது அரசியல் சாணக்கியத்தை நல்லதொருவியூகமாகப் பயன்படுத்தி கட்சியை மீளக் கட்டியெழுப்புவதில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் வெற்றி இலக்கைத் தொட்டவர்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை உருவாக்கியபோது அன்னாரது அரசியல் பாடத்தைப் பெற்றுக் கொண்டவர் ரணில் விக்ரமசிங்க. ஏன் அரசியல் அரிவரி பாடத்தைக் கூட ஜே.ஆரிடமே ரணில் பெற்றுக் கொண்டார். ஜனநாயக அரசியலிலும் சர்வாதிகாரம் உண்டு என்பதை ஜே.ஆரிடமே அவர் கற்றுக் கொண்டார் என்றால் அது புதுமையான தொன்றல்ல.

பாரியதொரு அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் அதிகாரப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அந்தச் சவாலை தன்னால் வெற்றிகொள்ள முடியும் என்பதை அன்னாரது 76ஆவது மாநாட்டுப் பேருரையின் மூலம் வெளிக்காட்டியிருக்கின்றார.

மாநாட்டின் தொனிப்பொருளான ஒன்றாய் நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்று அறைகூவலை விடுத்திருக்கின்றார். எம்மிடையே பலகட்சிகள் இருக்கலாம் ஆனால் நாமனைவரும் இலங்கையர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். நாம் ஒரு தாய் மக்களாவோம். இலங்கை மாதாவின் பிள்ளைகள் கட்சி அரசியலை தேர்தலோடு மட்டுப்படுத்திக் கொள்வோம். இன்று வீழ்ந்து போயுள்ள நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றுபடுவோம் என்ற அழைப்பை விடுத்திருக்கின்றார். இதுதான் ஜனநாயக அரசியல் பண்பு என்பதை சூசகமாக வெளிக்காட்டியிருக்கின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த அழைப்பு இன்று நாட்டின் மீது பற்றுக்கொண்டுள்ள அரசியல் சக்திகளை விழிப்படையச் செய்துள்ளது. பலகட்சிகளிலும் இருக்கின்ற அரசியல்வாதிகளையும் அவற்றின் ஆதரவாளர்களையும் சிந்திக்கத் தூண்டியிருக்கின்றது. மக்கள் மத்தியில் கூட விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கின்றது.

பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் துவண்டு போயுள்ள தேசத்தை, இருள் சூழ்ந்துள்ள நாட்டை மீண்டும் ஒளிபரவச் செய்யக்கூடிய பலமும், சக்தியும், தமது நாட்டுக்கு உண்டு என்பதை ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவின்  76வது மாநாட்டுப்பேருரை வெளிச்சம்போட்டுக்காட்டி இருக்கின்றது. ரணிலின் ஆழ் மனநம்பிக்கைப் பயணம் நிச்சயம் வெற்றிப் பயணமாக அமையும் என்பதை உறுதியாக நம்பலாம். நாளைய விடியல் நாட்டுக்கான விடிவாக ஒளிபரவும் என்பதே நிதர்சனமானது.

கலாபூஷணம்
எம்.ஏ.எம். நிலாம்

Comments